Tuesday, 22 July 2008

தவளையும் நானும்...

நான் ஒரு தவளை போல. ஆம், தவளையால் எப்படி நீரிலும், நிலத்திலும் வாழ முடிகிறதோ, அது போல தான், எனக்கும்,இரு வேறு விருப்பங்கள், இரு வேறு எண்ணங்கள், இரு வேறு கொள்கைகள், உள்ளன. கம்யூனிசமும், பெரியாரிசமும், எனக்குமிகவும் பிடிக்கும். அதன் தாக்கங்களும் என்னுள் உண்டு. ஆனாலும், வீட்டில் உள்ளவர்கள் கோயிலுக்கு அழைத்தால், பிரியமுடன் செல்வேன். இரு கரம் கூப்பி, கண்களை மூடி, நானும், மற்றவர்களை போல நிற்பேன்.... ஆனால், என்னவேண்டுவது, யாரிடம் வேண்டுவது, எப்படி வேண்டுவது என்பதைத்தான், என்னுடைய இந்த முப்பதாவது வயதிலும்யோசித்துக்கொண்டிருப்பேன். வீட்டிலும், திருமணத்திற்கு பிறகு, விஷேட நாட்களின் போது, மற்ற குடும்பத்தலைவிகளைபோல, சாமி படங்களுக்கு பூ வைத்து, விளக்கேற்றுவேன். இப்படியெல்லாம் இருந்தாலும், நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்.எனக்கு எளிமையாக இருப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், சில நேரங்களில், பகட்டுத்தனமும் பிடிக்கும். இப்படி, இரு வேறு விருப்பங்களின் சங்கமமாக இருக்கும் நானும், தவளையும் ஒன்றுதானே....?

Tuesday, 24 June 2008

கடிதம்

என்னதான், தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டு, தமிழில் அச்சு செய்து, வலைப்பதிவில் பதிவு செய்து வந்தாலும், பேனாவில் மசி ஊற்றி, விரலிடுக்கில் மசி கசிய, அதை பிடிக்கத் தெரியாமல் பிடித்து, அக்காகளிடமும, தங்கச்சியிடமும், பேனா சண்டை போட்டு, அன்புடைய... என்று ஆரம்பித்து, இரண்டு வரிகளில் கடிதம் எழுதியமுதல் பதிவை மறக்கவே முடியாது. அந்த இன்பமும், வேறு எதிலும் கிடைக்காது. இன்றுள்ள செல் பேசிகளுக்குமுந்தைய தொலைபேசிகளுக்கு முன்னால், கடிதங்களுக்காக காத்திருப்பது ஒரு பரவச அனுபவம். அதுவும், கல்லூரி நாட்களில், விடுதி வாசம் செய்தவர்களுக்கு தெரியும் அதன் அருமை. எங்கள் விடுதியில், யாருக்கு அதிககடிதங்கள் வருதுன்னு ஒரு போட்டியே நடக்கும். விடுதிக்கு வரும் கடிதங்கள் எல்லாம் வரவேற்பரையில் ஓரு table-லவச்சிருப்பாங்க. அவங்க அவங்க அவங்களுடைய கடிதங்களை எடுத்துக்கலாம். மதியம் 2;30 மேல தான் தபால்காரர்வருவார். வேலை நாட்களில் மாலையில், விடுதிக்குள் நுழையும்போதே நமக்கு கடிதம் வந்திருக்கிறதா என்ற கேள்வியுடன்தான் வருவோம். ஆனால், சனிக்கிழமை மற்றும் விடுதியில் இருக்கும் நாட்களில் எப்படா தபால்காரர் வருவார் என்றுதவமிருப்போம். அந்த கடிதங்களிலும், அனுப்புநர் யார் என்று நமக்கு முன் நம்ம friends-லாம் பார்த்து, ஏ.... உனக்குஉங்கம்மாகிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு... அப்படின்னு கத்திட்டே வந்து நம்மகிட்ட குடுக்கும்போது... ஆஹா...ஏதோ நம்ம அம்மாவையே நேர பாத்துட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு...! ( இதில் காதல் கடிதங்களுக்கும் பஞ்சமிருக்காது)யார்க்கு நிறைய லெட்டர்ஸ் வருதுன்னு ஒரு போட்டியே நடக்கும். அதுல எப்பவுமே நான்தான் first- அதுவும், விடுதியில் சேர்ந்த புதிதில் தான்... கொஞ்ச நாட்கள்கழிச்சு பாத்தா, விடுதிக்கு வந்த நியூ கம்மர் டாப் ரேங்க் வாங்குவாங்க. இந்த டாப் ரேங்க் அப்பப்போ மாறிட்டே இருக்கும். அந்த கடிதங்களை ஒவ்வொருவருடைய கையெழுத்திலும் படிக்கும்போதே, ஏதோ அவங்ககிட்ட நேரடியாகபேசிய உணர்வு வரும். எனக்கு ஒரு கெட்ட பழக்கம்.... கண்டிப்பாக மூணு பக்கத்துக்கு கம்மியாக கடிதம் எழுத மாட்டேன். ஆனா, என்னுடைய ரெண்டாவது அக்காவுக்கு ஒரு நல்ல பழக்கம்... யார்க்குமே லெட்டர் எழுத மாட்டங்க. அப்படியே எழுதினாலும், அந்த லெட்டர் ரெண்டு வரியை தாண்டாது. நான் ரொம்ப ஆச்சர்யமா எப்படி உன்னால ரெண்டே வரில லெட்டர் எழுத முடியுதுன்னு கேட்டேன். அதுக்கு அவங்க உன்னால எப்படி வழ, வழன்னு எழுத முடியுதுன்னு ஆச்சர்யமாகேட்டாங்க...
கடிதங்களில் தான் எத்தனை வகை.... நேரு மகள் இந்திராவுக்கு எழுதிய வரலாற்றுச்சிறப்பு மிக்க கடிதங்கள்... புதுமைபித்தன் தன் மனைவி கமலாவிற்கு எழுதிய காதல் சொட்டும் கடிதங்கள்... பகத்சிங் சாவை எதிர்நேக்கி இருத்தபோதும், தன் தந்தைக்கு எழுதிய புரட்சி கடிதங்கள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நாம், மின்னஞ்சலில்எழுதும் எந்த கடிதமும் அதனை ஈடு செய்ய முடியாது. மின்னஞ்சல் கடிதங்கள் எல்லாமே உயிரோட்டமில்லா கடிதங்கள்னு சொன்னாலும் மிகையாகாது.

Saturday, 21 June 2008

மகளிரணி மாநாடு

சமீபத்திய செய்தித்தாள்கள் அனைத்தும் தி.மு.க.வின் மகளிரணி மாநாட்டை பிரதானப்படுத்தி உள்ளன. ஆனால், மாநாட்டுக்கு வந்திருந்த அனைத்துப்பெண்களும், உணர்வு பூர்வமாக பங்கேற்றார்களா என்பதுதான் கேள்வியே.இந்த மாநாடு என்பதே தன் மகள் கனிமொழியை முன்னிறுத்துவதற்காக கலைஞர் நடத்திய அரங்கேற்றம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்த்த பிறகுதான் தெரிகிறது, இது அண்ணன் அழகிரி தன் மகள் கயல்விழிக்காக நடத்திய அரங்கேற்றம் என்பது. கனிமொழியோ, கயல்விழியோ, அது அவர்கள்குடும்ப பிரச்சனை.
காசுக்காகவும், பதவிக்காகவும், கூடிய கூட்டத்தை பார்த்து, பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்ற மாயை உருவாகியுள்ளது. ஆனால், இந்த கூட்டமே, பெண்களின் அவல நிலைக்கு ஒரு முன்னுதாரணம். தன் குடும்பத்தின்பொருளாதார சூழ்நிலையே பெண்களை இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு இழுத்து வருகிறது. இப்படிப்பட்ட கூட்டங்களால்பெண்களின் வாழ்நிலை மாறிவிடாது. ஆனால், கூட்டத்தை கூட்டியவர்களின் வாழ்நிலை கண்டிப்பாக மாறிவிடும்.

Thursday, 19 June 2008

பட்டத்து யானை...

கடந்த சில வாரங்களாக, ஜூனியர் விகடன் இதழில், வேல.இராம்மூர்த்தி பட்டத்து யானை என்ற தொடரை எழுதி வருகிறார்.
தமிழகத்தின், தென் கோடி முனை பற்றி இதுவே முதல் இலக்கிய பதிவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
கரிசல் மண் பதிவுகள் மட்டுமே இதுவரை தென்தமிழ் பதிவுகளாக பார்க்கப்பட்டு வந்துள்ளன. ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் அனைத்தும், வட இந்தியாவில் மட்டுமே நடந்தன என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், இந்த தொடர், ஒரு மாற்றுக்கருத்தை முன் வைத்து வெளி வருவதை வரவேற்போம். நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஆங்கிலேய எதிர்ப்பு வெடித்து கிளம்பியது என்ற உண்மையை இந்த தொடர் நம் பொட்டில் அறைந்து சொல்கிறது.
இந்த தொடரின், நடை ம்ம்ம்ம்.... படிப்பவர்களை புரட்டி போடுகிறது. அந்த பகுதி சொல்லாடல்கள், அந்த காலகட்டத்தில், அம்மக்களின், வாழ்க்கை முறையை நம் முன் விவரிக்கின்றது.
இத்தொடர் ஒரு அருமையான பதிவு என்பது மறுக்க முடியாது.

Wednesday, 18 June 2008

என்னுடைய முதல் வலை பதிவு

என்னுடைய முதல் வலை பதிவு வலை படிப்பாளிகளுக்கும், வலை பதிவர்களுக்கும் என்னுடைய வணக்கம். நீண்ட நாட்களாகவே வலை பதிவில் எழுதவேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால், தமிழில் எழுதுவதை கற்பதற்கே நெடு நாட்கள் ஆகி விட்டன. இதோ, என்னுடைய முதல் பதிவு. என்னுடய எண்ணங்களை வலையில் பார்ப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. இனி, என் பதிவுகள் தொடரும்.....எழுத வேண்டும் என்று தோன்றுகிறது... எதை எழுத....கண்டதை, கேட்டதை, மனதில் நின்றதை, மனதை சுட்டதை எழுதுகிறேன்.

என்னுடைய முதல் வலை பதிவு